கோத்தகிரியில் சுகுனி காய் விளைச்சல்: அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரியில் சுகுனி காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரியில் சுகுனி காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும், ஒருசில விவசாயிகள் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.
இந்த விவசாயிகள் விதை, இடுபொருள்கள் மற்றும் உரங்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கிலீஷ் காய்கறிகளுக்கு நல்ல கொள்முதல் விலை இருந்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் அவற்றை பயிரிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசக்கல், ஓடேன்துறை, வ.உ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சுகுனி காய் பயிரிட்டு உள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுகுனி காய் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நாட்டை தாயகமாக கொண்ட சுகுனி காய் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளதால், இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
உணவில் சுகுனி காயை பயன்படுத்தினால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவற்றை குறைக்கிறது. இளமையாக இருக்கவும், இருதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கவும், கண் பார்வையை அதிகரிக்கவும் சுகுனி காய் பயன்படுகிறது.
சுகுனி காய் கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில் சுமார் 4 அங்குலம் முதல் 8 அங்குல நீளத்தில் வளரக் கூடியது. நிலத்தை நன்கு பண்படுத்தி சுகுனி காய் நாற்றுக்களை தோட்டங்களில் நடவு செய்ய வேண்டும்.
பின்னர் தண்ணீர், உரங்களை இட்டு நன்கு பராமரித்து வந்தால் 35 நாள்கள் முதல் 55 நாள்களுக்குள் சுகுனி காய்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். தற்போது,  விளை நிலங்களுக்கே வந்து சுகுனி காய்க்கு கிலோ ரூ.25 விலை கொடுத்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் இவற்றை விற்பனை செய்வதற்காக காய்கறி மண்டிகளுக்கு கொண்டுச் செல்ல ஆகும் போக்குவரத்து செலவு குறைகிறது. குறுகிய காலத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராவதுடன், கணிசமான லாபமும் கிடைப்பதால் சுகுனி காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com