ஜெருசலேம் புனிதப் பயணம்:  நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்துக்காக தமிழக அரசின் நிதியுதவியைப்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்துக்காக தமிழக அரசின் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 50 அருட் சகோதரிகளுடன் 600 கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனித ஸ்தலங்களையும் உள்ளடக்கியதாகும்.  இந்த புனிதப் பயணம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளடக்கியதாகும். பயணக்காலம் 10 நாள்கள் ஆகும். 
இதற்கான விண்ணப்பப் படிவத்தை  கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 எனக் குறிப்பிட்டு ஆணையர்,  சிறுபான்மையினர் நலத் துறை, கலச மகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது 0423-2440340 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com