இயல்பு நிலை திரும்புகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர்

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். உதகையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் தெரிவித்ததாவது:
கடந்த 10 நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உதகை, குந்தா, கூடலூர்,பந்தலூர் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை அடுத்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. 
மழையால் சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மழையால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக ஒவ்வொரு துறையினரும் கொடுத்துள்ள விவரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 
நிரந்தர மறு சீரமைப்புக்காக எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்து துறைவாரியான அலுவலர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மறு சீரமைப்புக்கான ஆய்வுப் பணிகளின்போதே, இனிவரும் காலங்களில் மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடங்கள் எவை என்பது தீர்மானிக்கப்படும்.
மாவட்டத்தில் 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் பகுதியளவு சேதமடைந்தவை- நிரந்தர சேதமடைந்தவை குறித்து முதல்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக துணை ஆட்சியர் நிலையிலான 11 அதிகாரிகளின் மேற்பார்வையில் 82 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீடுகள் இன்னமும் மழை நீரால் சூழப்பட்டும், சுவர்களில் விரிசல் விழுந்தும் காணப்படுகின்றன. அவற்றில் இனிமேலும் வசிப்பது ஆபத்தானதாகும்.  அதேபோல,  செக்ஷன் 17  நிலப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் இனிமேல் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது என்பதால் அதுதொடர்பாகவும் இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
பகுதி அளவில்  வீடு சேதமடைந்தவர்களுக்கு தாற்காலிகக் குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். அதிக அளவில் பாதிக்கப்பட்டு நிரந்தரக் குடியிருப்பு தேவைப்படுவர்களுக்கு மாற்று இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் வரை, டேன்டீ போன்ற அரசுத் துறை  நிறுவனங்களால் பயன்படுத்தாமல் உள்ள குடியிருப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக  ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் குடிசை மாற்று வாரியத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.  
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அதிக மழைப் பொழிவு ஏற்பட்ட பகுதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமையாக ஓர் ஆய்வு நடத்தப்படும். 
அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் 911 மி.மீ. மழை பதிவானது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி பகுதியில் மின்வாரியக் குடியிருப்பு வரை தற்போது அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. 
கேரள மாநில அரசுக்கு உதவி:  கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கீழ்நாடுகாணியிலிருந்து வழிக்கடவு வழியாக கேரள மாநிலம், மலப்புரம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இரு மாநில சாலைகளும் 4 கி.மீ. தூரத்துக்குத் துண்டிக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்ட  ஆட்சியரின் வேண்டுகோளுக்கேற்ப, நீலகிரி மாவட்டத்திலிருந்து 2 பொக்லைன் வாகனங்களும், கூடுதலாக நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்களும் வழிக்கடவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக எல்லைப் பகுதியிலிருந்து கேரள மாநில எல்லைப் பகுதியை நோக்கி சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவர். 
கேரள அரசு கேரள மாநில எல்லையை நோக்கி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும். எனவே விரைவில் இச்சாலை சீரமைக்கப்பட்டு இரு மாநிலப் போக்குவரத்தும் தொடங்கப்படும். கையுண்ணி  வழியாக தமிழகம்- கேரளம் இடையிலான அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com