நிலச்சரிவு, வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமங்களை பார்வையிட்டார் ஆ.ராசா

தொடர் மழையால் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் உருக்குலைந்த ஓவேலி பகுதியிலுள்ள

தொடர் மழையால் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் உருக்குலைந்த ஓவேலி பகுதியிலுள்ள கிராமங்களை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா புதன்கிழமை பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த பத்து நாள்களாக பெய்த தொடர் கனமழையால் ஓவேலி பேரூராட்சியிலுள்ள கிராமங்கள்  நிலச்சரிவாலும் காட்டாற்று வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் உள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு,  முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பாதிக்கப்பட்ட ஓவேலி காமராஜ் நகர், பார்வுட் பஜார் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், பிளவுபட்ட சாலைகளைப் பார்வையிட்டார்.
கிளன்வான்ஸ் தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளைப் பார்வையிட்ட அவர் சேரன்நகர், சீபுரம், எல்லமலை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். எல்லமலையில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவில்  சைனுதீன் (43) என்பவர் புதையுண்ட இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை அவர் பார்வையிட்டார்.பிறகு கூடலூர் நகரில் நிலச்சரிவு, வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, கூடலூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கயுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளச் சேதமடைந்த  அனைத்துப் பகுதிகளையும் இரண்டு நாட்கள் ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அறிக்கை சமர்பிக்க உள்ளேன். கூடலூர், ஓவேலி, பந்தலூர் பகுதி, கேரள மாநில எல்லையோரக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
ஓவேலி பகுதிக்கு புனரமைப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருள்களைக் கொண்டுசெல்ல வனத்துறை அனுமதிப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆ.ராசா கூறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, திமுக ஒன்றியச் செயலாளர் அ.லியாகத் அலி, மாவட்டச் செயலாளர் முபாரக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
சைனூதீன் குடும்பத்துக்கு நிதியுதவி: கூடலூரில் பெய்துவரும் தொடர் மழையில் கடந்த வியாழக்கிழமை ஓவேலி எல்லமலை பகுதியில் சாலையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் சைனுதீன் மற்றும் அவரது நண்பர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது நிலச்சரிவில் புதையுண்டார்.  இதுவரை அவரது சடலம் கிடைக்கவில்லை. அவரது வீட்டுக்குச் சென்ற ஆ.ராசா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவருடைய இரு மகன்களிடம் ரூ. 1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
   இன்று பந்தலூரில் ஆய்வு:  பந்தலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா வியாழக்கிழமை பார்வையிடுகிறார். பந்தலூர் தாலுகாவில் சேரங்கோடு, சேரம்பாடி, அம்பமூலா, வெள்ளேரி, பொன்னேணி, குந்தலாடி உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிடும் அவர் நிவாரண முகாம்களில் உள்ளவர்
களைச் சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com