Enable Javscript for better performance
கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்:  நீலகிரி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்:  நீலகிரி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

    By DIN  |   Published on : 24th August 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். 
    கோவையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன், இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆயுதம் ஏந்திய போலீஸார் பணியமர்த்தப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, போலீஸாருடன், தேசிய பாதுகாப்புப் படையினர் 5 குழுக்களாக நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
    வெலிங்டன் ராணுவ மையம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் கூடலூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    அதேபோல, அதிவிரைவுப் படையினரின் 5 குழுக்களாகவும், நக்சல் தடுப்புப் பிரிவினரும் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா மையங்கள் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லைகளை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதேபோல, உதகை மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், நகர பேருந்து நிலையம், ஏடிசி கிராமப்புற பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், அனைத்து சுற்றுலா மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    உதகையில் இருந்து கல்லாறு வரை உள்ள ரயில்வே தண்டவாளங்களில் போலீஸார் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிமருந்து நிபுணர்கள், காவல் துறை மோப்ப நாய் பிரிவினர் உள்ளிட்டோரின் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 
    இதையடுத்து, கோவை மண்டல காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் நீலகிரியில் முகாமிட்டுள்ளார். அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai