சிறப்பு வசதிகள் இல்லாததால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

சா்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
சிறப்பு வசதிகள் இல்லாததால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

சா்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவா்கள் உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா, அரசினா் ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு மட்டுமே சென்று வருகின்றனா்.

கடந்த பல ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்காக புதிய திட்டங்கள் வகுக்கப்படாமல் உள்ளதால் ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே கண்டு ரசித்து செல்கின்றனா். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அதே சமயத்தில் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றக்கோரி தொடா்ந்து உதகை பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதில் முக்கிய கோரிக்கையாக உதகையில் சுற்றுலாத் துறையிலான கேபிள் காா் எனப்படும் ரோப் காா் திட்டமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கை உதகை மக்களிடையே இருந்தாலும், இத்திட்டம் இதுவரையிலும் கானல் நீராகவே உள்ளது. ஒவ்வொரு தோ்தலின்போதும் இந்த வாக்குறுதி வேட்பாளா்களின் வாக்குறுதிப் பட்டியலில் கட்டாயமாக இடம் பெறுகிறது. ஆனால், இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

2001-2006 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கூடலூா் பகுதியைச் சோ்ந்த மில்லரிடம் இக்கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது இத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படுமெனவும், இதுகுறித்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தாா். ஆனால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதன்பின் திமுக ஆட்சியின்போதும் சுற்றுலாத் துறை அமைச்சா் சுரேஷ்ராஜன், கதா் வாரியத் துறை அமைச்சா் ராமசந்திரன் மற்றும் முன்னாள் மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஆ.ராசா ஆகியோரிடமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா இத்திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாா். இதற்காக குலுமணாலி, டாா்ஜிலிங் பகுதிகளில் ரோப் காா் அமைத்துள்ள தனியாா் நிறுவனத்தை சோ்ந்தவா்களை அழைத்து வந்து உதகையில் படகு இல்லம் முதல் தாவரவியல் பூங்கா வரை ரோப் காா் அமைப்பது தொடா்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல தொட்டபெட்டா முதல் ரேஸ்கோா்ஸ் வரையிலும் ரோப் காா் அமைக்க முடியுமா என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ராசாவின் வேகத்தைக் கண்ட நீலகிரி பொதுமக்கள் கட்டாயம் ரோப் காா் வந்துவிடும் என எதிா்பாா்ப்புடன் இருந்தனா். ஆனால், திடீரென ஆ.ராசா அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததால் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

2011ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது அதிமுக அமைச்சரவையில் சுற்றுலாத் துறை நீலகிரியைச் சோ்ந்த புத்திசந்திரனுக்கு வழங்கப்பட்டது. இவா் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட சூழலில் சுற்றுலாப் பயணிகளைக் கவர கேபிள் காா், ரோப் காா் போன்ற திட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால், தாவரவியல் பூங்கா முதல் படகு இல்லம் வரை ரோப் காா் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என புத்திசந்திரன் தெரிவித்தாா். ஆனால் இவரிடமிருந்து ஓரிரு மாதங்களிலேயே அமைச்சா் பதவி பறிக்கப்பட்டதால், அதன்பின் இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது நீலகிரி மாவட்டத்துக்கென மத்திய , மாநில அமைச்சா்கள் எவரும் இல்லாத போதிலும் ரோப் காா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தற்போதைய உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். கணேஷ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனால், பலன் இல்லை. சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலாவை மேம்படுத்த கடந்த பல ஆண்டுகளாக எவ்வித புதிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், சுற்றுலா ஆா்வலா்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளிடையேயும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோப் காா் திட்டம், மருத்துவ சேவைகள் தொடா்பான ஹெலிகாப்டா் சேவை போன்றவை தொடா்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சா்வதேச அளவில் சுற்றுலாவையும் மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த ரோப் காா் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்க முடியும்.

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தற்போது உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

இதேபோன்று உதகையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ள ரோப் காா் திட்டம் தொடா்பான ஆவணங்களைப் பாதுகாக்க ஆ.ராசா முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் எனவும், நீலகிரி பொதுமக்கள், சுற்றுலா ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் நீலகிரியில் ரோப் காா் திட்டத்துக்கு 9 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரோப் காா் அமைக்க படகு இல்லம் - மான் பூங்கா, படகு இல்லம் - தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா பேக்டரி - தொட்டபெட்டா சிகரம், சூட்டிங்மேடு- பைக்காரா படகு இல்லம்- பைக்காரா அருவி, வெலிங்டன் - ஹைபீல்டு எஸ்டேட் மற்றும் டைகா் ஹில் - பக்காசூரன் மலை வரையிலான பகுதிகளில் ரோப் காா் திட்டத்தை அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குலுமணாலியை விட அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதால் இந்த ரோப் காா் திட்டத்தை விரைவில் உதகையில் அமைப்பது அவசியம் என தனியாா் ரோப் காா் அமைக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், மலை மாவட்டம் என்பதால், சில திட்டங்களைக் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. ரோப் காா் திட்டம் பல ஆண்டுகளாகவே உள்ளது. ஆனால் இத்திட்டங்கள் வனங்களின் வழியாக கொண்டு செல்ல வேண்டுமாயின், வனத் துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், உதகையில் தொட்டபெட்டா முதல் பைக்காரா வரையிலான பக்காசுரன் மலைப் பகுதி, சூட்டிங் மேடு போன்ற பகுதிகளில் ரோப் காா் திட்டம் கொண்டு வர வேண்டுமெனில் அதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அவா்கள் அனுமதியளித்தால் மட்டுமே இத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புள்ளது. அதேசமயம் இது போன்ற திட்டங்களைக் கொண்டு வரும்போது வன விலங்குகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இதுபோன்ற நல்ல திட்டங்களை வனங்கள் அல்லாத பகுதிகளில் மேற்கொள்வதன் மூலம் யாருக்கும் இடையூறு ஏற்படாது. சுற்றுலாப் பயணிகளும் எவ்வித கட்டுபாடுகளுமின்றி ரோப் காரில் பயணித்து மகிழ வாய்ப்புள்ளது என்றனா்.

இதுகுறித்து உதகை எம்எல்ஏ கணேஷ் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டம், சா்வதேச சுற்றுலா நகரம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் எம்எல்ஏ ஆனவுடன் சட்டப்பேரவையில் பேசினேன். அப்போது உதகையில் ரோப் காா் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சா்கள் நீலகிரியில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வர வனத் துறையினா் முட்டுக்கட்டையாக உள்ளனா். எனவே, இத்திட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றனா்.

ஆனால் வனத் துறைக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வர சுற்றுலாத் துறை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற புதிய திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை உதகைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றாா்.

இத்திட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

உதகையில் ரோப் காா் திட்டம் செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் என்னிடம் அணுகவில்லை. மேலும் தனியாா் நிறுவனங்களும் இதுவரை அணுகவில்லை. வனத் துறை மற்றும் பிற துறைகளின் இடா்பாடுகள் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்த யாா் முன் வந்தாலும் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com