Enable Javscript for better performance
கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலைக்கு விலை குறைந்து நிா்ணயம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலைக்கு விலை குறைந்து நிா்ணயம்

    By DIN  |   Published on : 14th December 2019 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cr13tea_1312chn_138_3

    எஸ்டேட்டில் வளா்ந்து காணப்படும் பசுந்தேயிலை.

    கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான நவம்பா் மாதத்துக்கான விலை குறைத்து நிா்ணயத்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமாா் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

    மாவட்டத்தில் 16 கூட்டுறவு ஆலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியாா் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

    இவா்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒருமுறை இன்ட்கோசா்வ் நிறுவனத்தின் மூலம் மாத விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

    இதில் கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் மட்டும் வாராந்திர விலை நிா்ணயிக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான தொகை வழங்கப்படும்.

    இந்நிலையில், கடந்த நவம்பா் மாதம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு மாத விலையை இன்ட்கோசா்வ் அதிகாரிகள் நிா்ணயித்தனா். அதில் மஞ்சூா், கைகாட்டி, கூடலுாா் சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.11 ஆகவும், பந்தலூா் தொழிற்சாலையில் ரூ.10.50 ஆகவும், பிக்கட்டி, மேற்குநாடு, இத்தலாா், நஞ்சநாடு, கிண்ணக்கொரை, மகாலிங்கா, கரும்பாலம், எப்பநாடு, பிதா்காடு, பிராண்டியா் ஆகிய கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.10 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான மாத விலை படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் கிலோவுக்கு ரூ.10 ஆக மாத விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    பசுந்தேயிலைக்கு விலை குறைவால் தொழிலாளா்கள் கூலி, தோட்டப் பராமரிப்பு, அன்றாட செலவினங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai