Enable Javscript for better performance
உதகை நகரமே தூய்மையாக உள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- Dinamani

சுடச்சுட

    

    உதகை நகரமே தூய்மையாக உள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

    By DIN  |   Published on : 01st February 2019 05:32 AM  |   அ+அ அ-   |    |  

    உதகை நகரமே தூய்மையாக இருப்பதால் தனியாக குப்பைகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை என  உதகையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். 
    இதன் காரணமாக உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சாலையில் குப்பைகளே இல்லாததால்  குப்பைகளை அகற்றவும் மறுத்து விட்டார். 
    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்திய மண்வள பாதுகாப்பு சங்கத்தின் 28 ஆவது கருத்தரங்கை தொடங்கி வைத்த ஆளுநர் தொடர்ந்து, உதகை ராஜ்பவன் மாளிகையில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன்  மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். 
    பின்னர் உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றார். அங்கு தூய்மை பாரத இயக்கம் குறித்து பேசுகையில்,  இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை பாரத இயக்கம்  தற்போது வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சுகாதாரமில்லாத  சூழல்களால்தான் நோய் பரவுகிறது. இதற்காகவே ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில் 50 சதவீதம் வரை செலவிட வேண்டியுள்ளது.  ஒவ்வொருவரும் சுகாதாரத்தையும், தூய்மையையும் பேணிக் காத்தால் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும் என்றார். 
    இதையடுத்து தூய்மை பாரத இயக்கம் தொடர்பான உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது  உதகை மத்திய பேருந்து நிலைய வளாக சாலையில் இருந்த குப்பைகளை ஆளுநர் அகற்றுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக உதகை நகராட்சியின் சார்பில் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால்,  ஆளுநர் குப்பைகளை அகற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வந்து அங்கிருந்த குப்பைகளை பார்த்த ஆளுநர்,  உதகை நகரமே தூய்மையாக இருப்பதால் மிகக்குறைவாகவே குப்பைகள் உள்ள இடத்தில்தான் வந்து தூய்மைப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறிவிட்டு தூய்மைப்பணி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். 
    அதையடுத்து தூய்மை பாரத ரதத்தின் இயக்கத்தை மட்டும் தொடங்கி வைத்த ஆளுநர், அங்கிருந்தே கார் மூலம் கோத்தகிரி வழியாக கோவைக்கு திரும்பினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு,  உதகை நகர்மன்ற  பொறியாளர் ரவி, நகர்நல அலுவலர் டாக்டர்  முரளிசங்கர்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp