கோடை சீசனுக்காக நேரு பூங்காவில் 30 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவுப் பணி தீவிரம்
By DIN | Published On : 14th February 2019 07:48 AM | Last Updated : 14th February 2019 07:48 AM | அ+அ அ- |

கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி நகரில் பேரூராட்சி சார்பில் நேரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள மலர்த் தோட்டம், அழகிய புல் தரை, ரோஜா பூங்கா, சிறுவர் விளையாட்டுப் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அமைத்துள்ளன. நேரு பூங்காவை ஒட்டி காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் பழமையான அய்யனார் அம்மனோர் கோயிலும் அமைந்துள்ளன.
கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாள்கள் காய்கறிக் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் காய்கறிகளைக் கொண்டு சிற்பங்களை அமைக்கப்படும்.
கோடை சீசனுக்குள்பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் எனவும், வரும் மார்ச் மாதத் தொடக்கத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும் என்றும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.