முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
பிளஸ் 2 தேர்வுகள் நாளை தொடக்கம்: நீலகிரியில் 7,592 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்
By DIN | Published On : 28th February 2019 08:28 AM | Last Updated : 28th February 2019 08:28 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்குகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் 38 மையங்களில் 3,418 மாணவர்கள், 4,174 மாணவியர் என மொத்தம் 7,592 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாசாருதீன் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ஆம்தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக குன்னூர் கல்வி மாவட்டத்தில் 24 தேர்வு மையங்கள், கூடலூர் கல்வி மாவட்டத்தில் 16 மையங்கள் என மொத்தம் 38 தேர்வு மையங்களில் 3,418 மாணவர்கள், 4,174 மாணவியர் என மொத்தம் 7,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுப் பணிகளில் 44 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 40 துறை அலுவலர்கள், 80 அலுவலக பணியாளர்கள் ஆகியோருடன் 71 பறக்கும் படை உறுப்பினர்களும், 610 அறை கண்காணிப்பாளர்களும், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 12 பேர் என மொத்தம் 855 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை உறுப்பினர்களாக 83 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டத்துடனும், போதிய வெளிச்சத்துடனும் கூடிய தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்லி எழுதுபவர், மொழிப்பாட விலக்கு, தேர்வு எழுத கூடுதலாக 50 நிமிடம் ஆகிய சலுகைகள் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு தேர்வு அறைகள் தரைத் தளத்திலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தனித் தேர்வர்கள் உதகையில் சிஎஸ்ஐ சிஎம்எம் மேனிலைப் பள்ளியிலும், கூடலூரில் கலைவாணி மெட்ரிக். மேனிலைப் பள்ளியிலும் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுகள் தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனை 0423-2443845 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.