சபரிமலை பிரச்னை: கூடலூரில் முழு அடைப்பு
By DIN | Published On : 04th January 2019 07:22 AM | Last Updated : 04th January 2019 07:22 AM | அ+அ அ- |

சபரிமலை பிரச்னை தொடர்பாக கேரளத்தில் முழு அடைப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக எல்லையான கூடலூரிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது.
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் சென்ற சம்பவம் காரணமாக கேரளத்தில் வியாழக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழக எல்லையான கூடலூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைக்கக் கூறினர். இதனால் கூடலூர் பஜாரில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. உள்ளூர் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.