கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு மாற்றிடம் வழங்க கோரிக்கை
By DIN | Published On : 05th January 2019 03:16 AM | Last Updated : 05th January 2019 03:16 AM | அ+அ அ- |

கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் அமர்ந்து பணிபுரிய அடிப்படை வசதியுடன் கூடிய மாற்றிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி ஒன்றியத்துக்கு உள்பட்டு அரக்கோடு, தேனாடு, ஜக்கனாரை, கடினமாலா, கெங்கரை, கோடநாடு, தெங்குமரஹாடா, கொணவக்கரை, நடுஹட்டி, நெடுகுளா, குஞ்சப்பனை ஆகிய 11 ஊராட்சிகள் உள்ளன.
இந்த 11 ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக ஊராட்சி செயலர்கள் இல்லை. சில ஊராட்சிகளில் பணியிடம் காலியாக உள்ளன. இதனால் பெரும்பாலும் ஒரு ஊராட்சி செயலர் 2 ஊராட்சிகளின் பணிகளை கவனித்து வரும் நிலை காணப்படுகிறது.
இதனால் பணிப் பளு அதிகரிப்பதுடன், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் அன்றாட பணிகளான குடிநீர் விநியோகம், குப்பை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை, பணி உத்தரவு உள்பட பல்வேறு ஆவணங்களில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கவும், அவர்களது சில பணிகளை மேற்கொள்ளவும் ஒன்றிய அலுவலகத்துக்கு ஊராட்சி செயலர்கள் வந்து செல்ல வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றிய அலுவலகத்தில் அவர்கள் அமர்ந்து பணிபுரிய குறுகலான ஒரு சிறிய அறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 2 ஊராட்சி செயலர்கள் மட்டுமே அமர்ந்து பணிபுரியும் வகையில் அந்த அறை இருக்கிறது. இதனால் பணிகளை விரைந்து செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் பணிபுரிய அடிப்படை வசதிகளுடன் கூடிய விசாலமான அறை ஒதுக்க வேண்டும் அல்லது மாற்றிடம் வழங்க வேண்டும்.
மேலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.