போலி சான்றிதழ்: அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் மீது புகார்

உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றும் இருவர்

உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப்  பணியாற்றும் இருவர் போலி சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாக உதகை நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் நடவடிக்கையை அடுத்து அவர்கள் இருவர் மீதும் கல்லூரிக் கல்வித் துறை இயக்குநரகம் நடவடிக்கை எடுக்குமென தெரிகிறது.
இது தொடர்பாக உதகை அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் நிரந்தரப் பணியில் உதவிப் பேராசிரியர்களாக கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது கல்விச் சான்றிதழ்களை அண்மையில் பரிசோதித்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் இவர்களது ஆராய்ச்சிப் படிப்புக்கான சான்றிதழ்களில் சந்தேகம் இருப்பதாகத்  தெரிவித்தது. இதன் அடிப்படையில் பரிசோதனை செய்தபோது, பிகார் மாநிலம் பாட்னாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ்கள் பெறப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தத் தகவலை உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தியிடம் தெரிவித்த கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலர்கள், இச்சம்பவத்தில் தொடர்புடைய  இரண்டு உதவிப் பேராசிரியர்கள் மீதும் காவல் துறையில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பெற்று சென்னைக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில், உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி  உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புதன்கிழமை  புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவர் மீதும் வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.
தற்போது கல்லூரிக்குப் பொங்கல் விடுமுறைக் காலம் என்பதால் இந்த அறிக்கை கல்லூரி நிர்வாகத்துக்கு வெள்ளிக்கிழமை கொடுக்கப்படும். 
அதன் பின்னர், இந்த அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உதகை அரசு கலைக் கல்லூரி நிர்வாகத்திலிருந்து  இதுவரையிலும் அந்த இருவர் மீதும் பணியிடை நீக்கம் உள்ளிட்ட எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து நடவடிக்கைகளும் சென்னையில் இருந்தே எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து இதே போன்ற போலி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்த காரணத்துக்காக உதகை அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களாகப்  பணியாற்றி வந்த சீமா (தாவரவியல் துறை), ஆனந்த் (ஆங்கிலத் துறை), ஆனந்தகுமார் (கணினி அறிவியல் துறை) ஆகியோர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com