சுடச்சுட

  

  உதகையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 217 மனுக்களின் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

  By DIN  |   Published on : 02nd July 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 217 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
  உதகையில் உள்ள  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 217 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.  பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  ஆட்சியர் உத்தரவிட்டார்.
  அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
  மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  குன்னூர் வட்டம், கொல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பியம்மாள் என்பவருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணையினையும், சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள், மாணவ, மாணவியருக்கு சத்துணவை தூய்மையான முறையிலும், சுகாதாரமாகவும் வழங்கும் பொருட்டு ஒரு மையத்துக்கு  தலா ரூ.493 வீதம் 313 மையங்களுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பில் சோப்பு, துண்டு, சமையல் செய்யும் போது அணிய வேண்டிய முன் கட்டப்படும் துணி, நகம் வெட்டும் கருவி, உணவில் முடி விழாமல் இருக்கும் பொருட்டு அணிய வேண்டிய தொப்பி ஆகியவை அடங்கிய பொருள்களின் பைகளை  வழங்கினார்.
  மேலும் சத்துணவு தொடர்பான குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக  ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைய தளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
  இக்கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கண்ணன், கலால் துறை உதவி இயக்குநர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது குதுரதுல்லா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai