சுடச்சுட

  

  பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 02nd July 2019 10:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.
  மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான பகுதியாக இருந்து வரும் நிலையில் அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள், பறவைகள் இங்குள்ளன.
  இத்தகைய சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் பொருள்களை சாப்பிட்டு வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
  இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் குன்னூரை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விவேக் அரிய வகை மரங்களை நடவு செய்தார். பிளாஸ்டிக் பொருள்களை சுத்தம் செய்து தூய்மை பாரதம் திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  நீலகிரி மாவட்டம், உயிர் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
  அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். 
  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் பாபு, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சுரேஷ், கேத்தி பேரூராட்சியின் செயல் அலுவலர் நடராஜ் மற்றும் எல்லநள்ளி, கேத்திப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், பொது நல சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai