கோத்தகிரியில் 150 புதிய மின் மாற்றிகள் அமைக்கத் திட்டம்: மின் வாரிய உதவி கோட்டப் பொறியாளர் தகவல்
By DIN | Published On : 05th July 2019 07:18 AM | Last Updated : 05th July 2019 07:18 AM | அ+அ அ- |

கோத்தகிரி பகுதிகளில் மழை, காற்று சமயங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை புதிதாக மாற்றி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின் வாரிய உதவி கோட்டப் பொறியாளர் மாதன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளில் 38 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
நகரப் பகுதியில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன.
மழை காலங்களில் பலத்த காற்று வீசும்போது, பழுதான ஒயர்கள் அறுந்து விழுவது, மரக்கிளைகள் உடைந்து மின் கம்பங்களின் மீது விழுவது போன்ற சம்பவங்களால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களால் அதிக ஆபத்து உள்ளதால் மக்களின் பாதுகாப்புக் கருதி மின் துறை சார்பில் புதிய ஒயர்கள் மாற்றப்பட உள்ளன. மேலும் பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்றும் திட்டத்தின்கீழ் கோத்தகிரி நகரம், டானிங்டன், பேருந்து நிலையம், தாலுகா அலுவலக சாலை, குன்னூர் சாலை உள்ளிட்ட இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. மேலும், மின் ஒயர்கள் அறுந்து விழுவதைத் தவிர்க்கவும், மின் கம்பிகளுக்குப் பதிலாக கேபிள் மூலம் சீரான மின் விநியோகம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய உதவி கோட்டப் பொறியாளர் மாதன் தெரிவித்துள்ளார்.