யானைகள் தாக்கியதில் வீடு, கோயில்கள் சேதம்
By DIN | Published On : 13th July 2019 07:14 AM | Last Updated : 13th July 2019 07:14 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் வியாழக்கிழமை இரவு யானைகள் தாக்கியதில் தோட்டத் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.
பந்தலூர் வட்டம், சேரம்பாடி சப்பந்தோடு பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த யானைகள் அங்குள்ள முத்தம்மாள் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தின. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதே பகுதியில் கடந்த ஒரு வாரமாக குட்டிகளுடன் சுமார் 16 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
2 கோயில்கள் சேதம்: பந்தலூர் வட்டம், அத்திக்குன்னா பகுதியில் நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள ஓம் சக்தி வழிபாட்டு மன்ற கோயிலை தாக்கி சேதப்படுத்தின. அதேபோல சேரம்பாடியை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் அங்குள்ள முனீஸ்வரன் கோயிலை தாக்கி சேதப்படுத்தின. இச்சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.