இரண்டாம் சீசனுக்காகத் தயாராகும் உதகை ரோஜா பூங்கா

உதகையில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற ரோஜா பூங்கா இரண்டாம் சீசனுக்காகத் தயாராகி வருகிறது.   


உதகையில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற ரோஜா பூங்கா இரண்டாம் சீசனுக்காகத் தயாராகி வருகிறது.   
நீலகிரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமான உதகைக்கு பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் முதல் சீசனின்போது இங்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை இரண்டாவது சீசனை கொண்டாட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 
இந்த சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைக் காட்டிலும் வடமாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது வழக்கம். முதல் சீசனுக்காக பூங்காவில் உள்ள அனைத்து மலர்ச் செடிகளும் கவாத்து செய்யப்பட்டன. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு அனைத்து செடிகளிலும், மலர்கள் பூத்துக் குலுங்கின. 
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை பொய்த்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையால் ரோஜா பூங்காவில் உள்ள புல் தரைகள் மற்றும் மலர்ச் செடிகளில் பசுமை அப்படியே உள்ளது. எனவே, அவைகளை இரண்டாம் சீசனுக்கு தயார் செய்யும் பணிகளில் தற்போது பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், புல் தரைகளை பராமரிக்கும் பணி, வளர்ந்த புற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இரண்டாம் சீசனுக்காக ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் வகைகளில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் சீசனுக்கு மட்டுமின்றி, அடுத்த இரு மாதங்கள் உதகைக்கு  வரும் சுற்றுலாப் பயணிகளும் ரோஜா மலர்களைக் கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com