உதகை அணைகளில் குறைந்து வரும் நீர் இருப்பு: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

உதகையில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம்  வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உதகையில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம்  வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. 
இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மார்லிமந்து அணை, பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அணை உள்ளிட்ட ஆணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன.
பார்சன்ஸ்வேலி முதல் குடிநீர் திட்டம், 2ஆவது குடிநீர் திட்டம் மூலம் தினமும் 10 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி. - பத்து லட்சம் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. மற்ற 9 அணைகளில் இருந்து தினமும் 0.45 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 
கடந்த ஜூன் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அவ்வப்போது குறைவான அளவே மழை பெய்து வருவதால் அணைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறையத் தொடங்கி உள்ளது.  
உதகை  நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடியில் தற்போது 20 அடியில்  மட்டுமே நீர்மட்டம் உள்ளது. மார்லிமந்து அணையில் 8 அடியிலும், டைகர்ஹில் அணையில் 14 அடியிலும், கோரிசோலா அணையில் 3 அடியுலும்  தண்ணீர் இருப்பு உள்ளது. 
தற்போது உதகையில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை விநியோகிக்க முடியும். அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தால் மட்டுமே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க முடியும். தவறும்பட்சத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com