Enable Javscript for better performance
உதகையில் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    உதகை நகரிலும் சுற்றுப்பகுதிகளிலும் புதன்கிழமை பகலில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை வலுக்காத நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும்,  முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மட்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது தூறல் மழையாகவும், சாரல் மழையாகவுமே பெய்து வருகிறது.  
    நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கூடலூர், தேவாலா பகுதிகளில் தலா 12 மி.மீ. மழையும், நடுவட்டம், அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் தலா 6 மி.மீ. மழையும், கிளன்மார்கன், மேல்பவானி ஆகிய பகுதிகளில் தலா 3 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. 
    இந்நிலையில் புதன்கிழமை பகலில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.  இதில் அதிகளவாக  உதகையில் 23 மி.மீ. மழை பதிவானது. 
    உதகை நகரில்  திடீரெனப் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போலத் தேங்கியது. இதனால் மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம், ரயில் நிலையம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
    சுமார் 2 மணி நேரம் பெய்த மழையைத் தொடர்ந்து மழை நீர் வடிய மேலும் இரண்டு மணி நேரம் ஆனது. இதனால் இந்தச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில்வே பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 4  மணி வரை, உதகையில் அதிகபட்சமாக 23 மி.மீ.,  தேவாலாவில் 6 மி.மீ.,  குன்னூரில் 5.5. மி.மீ.,  கேத்தியில் 5 மி.மீ.,  கல்லட்டி, அவலாஞ்சி, கூடலூரில் தலா 3 மி.மீ.,  மேல் பவானியில் 2 மி.மீ.,  எமரால்டில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai