Enable Javscript for better performance
சுகாதாரத் துறை செயல்படுத்தும் திட்டங்களை பழங்குடியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதாரத் துறை செயல்படுத்தும் திட்டங்களை பழங்குடியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை

    By DIN  |   Published on : 25th July 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பழங்குடியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று,  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார்.
    உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி பழங்குடியினர் கிராமத்தில் சமூகநலத் துறை மற்றும் சத்துணவுத் திட்டம் சார்பில் எடை குறைந்த பழங்குடியினக் குழந்தைகளுக்கு சத்துப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வழங்கினார். அப்போது அவர்  பேசியதாவது:
    தமிழக அரசு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு சதவீதத்தைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் "நடமாடும் சுகாதார வாகனங்கள்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
    மேலும் கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி,  ஊட்டச்சத்து  உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உணவுகளை கர்ப்பிணிகள் தொடர்ந்து உட்கொண்டால், எடை குறைந்த குழந்தைகளுக்கு வயிற்றிலேயே நல்ல ஊட்டச்சத்து கிடைத்து நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கும் என்றார்.
    பந்தலூர் வட்டத்துக்கு உள்பட்ட கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் 31 பழங்குடியினருக்கு நத்தம் பட்டாக்களை அவர் வழங்கினார். மேலும் கூடலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திசால் கிராமம், பரமுல்லா கிராமங்களைச் சார்ந்த 14 பழங்குடியினப் பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 29.40 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.
    இந்த நிகழ்ச்சிகளில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், மோகன குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai