முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
13 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 52,000 அபராதம் வசூலிப்பு
By DIN | Published On : 30th July 2019 08:34 AM | Last Updated : 30th July 2019 08:34 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த கள ஆய்வு மூலமாக 13 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 52,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினரின் ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 13 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ. 52,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் நீலகிரி மாவட்டத்திற்குள் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்த்தும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.