குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ. 31 கோடி வருவாய் அதிகரிப்பு
By DIN | Published On : 01st June 2019 09:24 AM | Last Updated : 01st June 2019 09:24 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற ஏலத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ. 31 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 17 ஏலங்கள் நடைபெற்றன. இதில் 1 கோடியே 75 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. மொத்த வருமானம் ரூ. 175 கோடி. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 1 கோடியே 55 கிலோ தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த வருமானம் ரூ. 144 கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ரூ. 31 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இதில், சராசரி விலையாக கிலோவுக்கு ரூ. 100. 27 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் ரூ. 93.16 ஆக இருந்தது. இது 21.52 சதவீத வளர்ச்சியாகும்.
வர்த்தகர்களிடையே தேவை அதிகரித்ததால் விற்பனையின் அளவு அதிகரித்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ. 31 கோடி அதிகரித்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் நடப்பாண்டின் இறுதியில் கடந்த ஆண்டை விட ரூ. 90 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.