குந்தா ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்: 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

குந்தா ஊராட்சிக்கு உள்பட்ட தும்பனேரிக்கம்பை சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற

குந்தா ஊராட்சிக்கு உள்பட்ட தும்பனேரிக்கம்பை சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு  ரூ. 2.74 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  வழங்கினார்.
உதகை அருகிலுள்ள குந்தா ஊராட்சி, தும்பனேரிக்கம்பை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்கிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இம் மனுநீதி நாள் முகாமின் நோக்கம்  "மக்களைத் தேடி அரசு' என்பதாகும். இந்த  மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மக்களைத்தேடி கிராமத்திற்கு வந்துள்ளனர். 
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவை பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.
 மேலும் படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கமும், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.12,000த்திலிருந்து ரூ.18,000மாகவும் உயர்த்தி  வழங்கப்படுகிறது. 
எனவே கர்ப்பிணிகள் அவரவர் ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்துகொண்டு தவறாமல் எடை எடுத்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துணவு மாவை தவறாமல் வாங்கி உண்ண வேண்டும். 
மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அதிக நபர்கள் வரும் பட்சத்தில் அவரவர் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னவென்பதை கண்டறிந்து தாங்களாகவே செய்து கொள்ளலாம்.
 எனவே அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர், மின் வசதி போன்றவை குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் 99431 26000 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிள் (வாட்ஸ் அப் எண்) தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 
இந்த மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி, ஊனமுற்றோர் உதவித்தொகையாக ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000  வீதம் 7 பயனாளிகளுக்கு ரூ. 84,000 பெறுவதற்கான ஆணையையும், 6 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு  உதவித் தொகையாக ரூ. 1.35 லட்சமும், 7 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.13,200 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 1 பயனாளிக்கு தலா ரூ. 440 மதிப்பில் 4 லிட்டர் வீதம் 5 பழங்குடியினப் பயனாளிகளுக்கு ரூ. 2,200 மதிப்பில் பஞ்சகாவியமும், 30 பயனாளிகளுக்கு மரக்கன்று களுமாக  மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ. 2.74 லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர்  வழங்கினார். 
பின்னர் பொது மக்களிடமிருந்து 91 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர்,   சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
முன்னதாக மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர்  தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதகை கோட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் நசுருதீன், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன்,  பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது குதுரதுல்லா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், குந்தா வட்டாட்சியர் சரவணன் ஆகியோருடன்  அரசுத்துறை அலுவலர்கள்,  பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com