தொட்டபெட்டா சாலையில் சீரமைப்புப் பணிகள் அறிவிப்புப் பலகை வைக்குமாறு பயணிகள் கோரிக்கை

தொட்டபெட்டாவில் சாலை சீரமைப்புப் பணிகள்  நடைபெறுவது குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொட்டபெட்டாவில் சாலை சீரமைப்புப் பணிகள்  நடைபெறுவது குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்களில் தொட்டபெட்டா சிகரம் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த சிகரத்துக்கு, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால், கோத்தகிரி- உதகை  நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள தொட்டபெட்டா பிரதான சாலையில் இருந்து, சிகரத்துக்குச் செல்லும் 2 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. 
இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் தாழ்வான பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செங்குத்தான சிகரத்துக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். 
இந்நிலையில், ரூ. 1.87 கோடி  மதிப்பில் இந்தச் சாலையைச் சீரமைக்கும் பணி சில நாள்களுக்கு முன்னர் துவங்கி நடந்து வருகிறது. எனவே, சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சிகரம் சென்றுவர, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டண வசூல் மையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  இதை அறியாத பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் தொட்டபெட்டா சந்திப்பு வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்புவது தொடர்கிறது. 
மேலும் இங்கு சாலைப் பணிகள் நடைபெறுவது தெரியாமல் செல்லும் வாகனங்கள்   திரும்பும்போது வாகன நெரிசலும் ஏற்படுகிறது.   
எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, சேரிங் கிராஸ், கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் தொட்டபெட்டா சாலை  தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது குறித்து  அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இந்த சாலைப்பணியை விரைவுபடுத்த வேண்டும்  என்று சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com