உதகையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 184 மனுக்களை அளித்த பொதுமக்கள்
By DIN | Published On : 18th June 2019 07:02 AM | Last Updated : 18th June 2019 07:02 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 184 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா,
தொழில், கல்விக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து, அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் கடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்டு, தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, குந்தா வட்டம், தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த ஷீபா என்பவரின் கணவர், அவரது மகன் ஆகிய இருவரின் மருத்துவ செலவுக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை, முள்ளிக்கொரை டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு படுக்கை, கம்பளி, தலையணை ஆகியவை வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.29 ஆயிரத்துக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன், கலால் துறை உதவி இயக்குநர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.