சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 18th June 2019 07:03 AM | Last Updated : 18th June 2019 07:03 AM | அ+அ அ- |

குன்னூர் - உதகை சாலையோரத்தில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர், கோரகுந்தா, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், குன்னூர் - உதகை சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பல ஆண்டுகள் வயதானவை என்பதால் பட்டுப்போய் உள்ளன.
இதனால் காற்று, மழை சமயங்களில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுகின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றின் காரணமாக சாலையோரம் உள்ள வலுவிழந்த மரங்கள் சாலையின் மீதும், கட்டடங்கள், வாகனங்கள் மீதும் விழும் நிலை உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கையாக வலுவிழுந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.