சுடச்சுட

  

  பருவநிலை மாற்றம் எதிரொலி: கடந்த 30 ஆண்டுகளில் உதகையின் வெப்பநிலை 1.2 டிகிரி அதிகரிப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக  மலைப்பகுதியான உதகையிலும் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 1.2 டிகிரி வெப்பம் அதிரித்துள்ளதாக உதகையிலுள்ள மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
   காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகளவில் இருந்த போதிலும், மலைப்பகுதியான உதகையில் நிலவும் குளிரின் காரணமாக இதுகுறித்து வெளிப்படையாக தெரியவில்லை. 
   இருப்பினும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மேலும் நீராதாரங்களிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. 
   இந்நிலையில்  உதகையிலுள்ள மத்திய மண் மற்றும் நீர்வளஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி மணிவண்ணன் நடத்திய ஆய்வில் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
   உலக வெப்பமயமாதலின் காரணமாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களின் பாதிப்பு நீலகிரி மாவட்டத்திலும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக அதிகப்படியான வறட்சி, அதிகப்படியான மழை, வெள்ளம், உறைப் பனிக்காலத்தில் ஏற்படும் அதிக அளவிலான குளிர், பருவ காலங்களின் கால அளவில் மாற்றம் உள்ளிட்டவை  நீலகிரி மாவட்ட விவசாயிகளை அதிக அளவில் பாதித்துள்ளது. 
   இதுதொடர்பாக  மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கடந்த 1960 முதல் 1989ஆம் ஆண்டு வரை ஒரு கட்டமாகவும், 1990 முதல் 2019ஆம் ஆண்டு  வரை ஒரு கால கட்டமாகவும் என ஆய்வு நடத்தப்பட்டது. 
   இதில் 1960-லிருந்து 1970 வரை இரண்டு வருடங்கள் மட்டும் அதிக வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன. 1970-லிருந்து 1990 வரை சராசரியான வெப்பநிலையே நிலவியுள்ளது.  
   அதன் பின்னர் 1991-லிருந்து 2010ஆம் ஆண்டு வரை  4 ஆண்டுகளும், 2010-லிருந்து 2019 வரை 6 ஆண்டுகள் அதிக வெப்பம் நிலவியுள்ளது.
   அதே நேரத்தில் மாவட்டத்தில் உதகையின் வெப்பநிலையும் குறைந்தபட்சம் 18.2 டிகிரியிலிருந்து 19.4 டிகிரியாக மாறிவிட்டது.  சராசரியாக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் வெப்பநிலை 0.62 டிகிரி வரையிலும், டிசம்பர் மாதத்தில் மிக அதிக அளவாக 1.2 டிகிரி வரையிலும் பதிவாகியுள்ளன. அதேபோல  குறைந்தபட்ச வெப்பநிலையில் சராசரியாக ஏப்ரல் மாதத்தில் 0.02 டிகிரியும்,  நவம்பர் மாதத்தில் 0.70 டிகிரியும் குறைந்துள்ளது. 
   பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் உதகை மட்டுமின்றி  நீலகிரி மாவட்டத்திலுள்ள விவசாயிகளும் அதிகப்படியான மழை பெய்யும் நேரத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு நீரில்லாத காலங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.  அதேபோல, பருவ காலங்களிலும் 
  மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதற்கேற்ற வகையிலேயே காய்கறி விவசாயத்தை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai