மஞ்சூர்- காரமடையை இணைக்கும் பெகும்பெள்ளா சாலை: ரூ.27 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்துடன் காரமடையை இணைக்கும்  மஞ்சூர் முதல் பெகும்பெள்ளா வரையிலான   சாலையை

நீலகிரி மாவட்டத்துடன் காரமடையை இணைக்கும்  மஞ்சூர் முதல் பெகும்பெள்ளா வரையிலான   சாலையை  ரூ.27  கோடி மதிப்பில் அகலப்படுத்துதல் மற்றும் கொண்டை ஊசி வளைவுகளை மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் பெகும்பெள்ளா வரை ரூ.27 கோடி மதிப்பில் ஒரு வழிச்சாலையை இடைவழிச்சாலையாக அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல் மற்றும் கொண்டை ஊசி வளைவு மேம்பாடு செய்தல் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
உதகையில் இருந்து காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தை இணைக்கும் முக்கிய மூன்றாவது மாற்றுப் பாதையாக குந்தா- பெகும்பெள்ளா சாலை செயல்படுகிறது. இச்சாலை காரமடையில் இருந்து மஞ்சூர், குந்தா, மேல் பவானி மற்றும் தாய்சோலையை இணைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
எனவே இச்சாலையை மத்திய சாலை நிதித் திட்டத்தின் மூலம் ஒருவழிச்சாலையை இடைவழிச் சாலையாக  அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல் பணி ரூ.27 கோடி மதிப்பீட்டில் 22 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தடுப்புச்சுவர் மற்றும் தாங்குசுவர் அமைத்தல், சிறுபாலங்களை அகலப்படுத்துதல், கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதிப்படுத்துவதுடன் நீலகிரி மாவட்ட சுற்றுலா வளர்ச்சியடையும். மேலும் நீலகிரி மாவட்டத்தின் மூன்றாவது மாற்றுப் பாதையும் செயல்படுத்தப்பட முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜு,  நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் விசுவநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி இயக்குநர் சுவாமியப்பன், உதவிப் பொறியாளர்கள் பாலச்சந்திரன், பிரகாஷ், ராஜேஷ், வட்டாட்சியர் ஆனந்தி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com