"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஆப்பிரிக்கன் கெளுத்தி' வகை மீன்

நீலகிரி மாவட்டத்தில், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஆப்பிரிக்கன் கெளுத்தி' வகை மீன் வளர்ப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தடை விதிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக  அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இதனால் இந்த வகை மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாதது. மேலும், இவ்வகை மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரிலும்  இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.
இம் மீன்கள், நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் வகை மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் வகை அழியும் அபாயம் உள்ளது. 
 இந்த வகை மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது.
அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று, பிற வகை மீன்களை அழித்து விடுவதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களைத் தவிர வேறு எந்த வகை மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகிவிடும். இதனால், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் போய்விடும்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனை மீறி, மத்திய, மாநில அரசுகளால்  தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது, வளர்ப்பது, இருப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால்,  அவற்றை முற்றிலும் அழித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட  மீன்களை மட்டுமே மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com