சிறுமி சாவில் திருப்பம்: மகளைக் கொன்ற தாய் கைது

உதகையில் ஊஞ்சல் விளையாடியபோது தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவரைக் கொலை செய்துவிட்டு

உதகையில் ஊஞ்சல் விளையாடியபோது தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 உதகை கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (33). இவர் இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவுப் பணி செய்து வருகிறார். இவரது மகள் உஷாராணி (10). இவரும் அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 இந்நிலையில் உஷாராணி வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி புதன்கிழமை விளையாடியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சுய நினைவு இழந்துவிட்டதாகவும், அதன் பின்னர் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அச்சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
 இந்நிலையில் அச்சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப, ராஜலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தாராம்.
 இதனால், அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மகளை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 ராஜலட்சுமியின் கணவர் ஏற்கெனவே அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனது தாயார் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜலட்சுமிக்கும், உதகையில் ஹோட்டலில் வேலை செய்யும் பிருத்வி பட், கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோருடன் தகாத தொடர்பு இருந்துள்ளது.
 அவர்கள் தனிமையில் இருந்தபோது, மகள் உஷாராணி பார்த்துவிட்டார். இதனை தனது பாட்டியிடம் கூறப்போவதாக உஷாராணி தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜலட்சுமியே தனது குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, குழந்தை ஊஞ்சல் விளையாடியபோது தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ராஜலட்சுமியை தற்போது கைது செய்துள்ளோம். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்ற இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com