நீலகிரி மக்களவைத் தொகுதி: 10 வேட்பு மனுக்கள் ஏற்பு; நாம் தமிழர் கட்சி உள்பட 5 பேர் மனுக்கள் தள்ளுபடி
By DIN | Published On : 28th March 2019 09:25 AM | Last Updated : 28th March 2019 09:25 AM | அ+அ அ- |

நீலகிரி மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 10 பேர் வேட்புமனுக்கள் புதன்கிழமை ஏற்கப்பட்டுள்ளன. மேலும், நாம் தமிழர் கட்சி உள்பட 5 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் ஆகிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இம்மனுக்கள் மீதான பரிசீலனை உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.மணிமேகலையின் வேட்பு மனுவில் அவரை முன்மொழிந்தவர்கள் அதற்கான படிவத்தில் கையெழுத்துப் போடாததாலும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த கண்ணபிரான் வேட்புமனுவில் அவரது வாக்காளர் பட்டியல் எண் தவறாக இருந்ததாகவும், சுயேச்சை வேட்பாளர் காமராஜ் மனுவில் படிவம் 26 தவறாக இருந்ததாகவும், அதிமுக மாற்று வேட்பாளர் சரவணகுமார், அமமுக மாற்று வேட்பாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோரின் வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர்கள் விவரம் தவறாக இருந்ததாலும் மேற்கண்ட 5 பேர் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதிமுக வேட்பாளர் தியாகராஜன், திமுக வேட்பாளர்ஆ.ராசா, அமமுக வேட்பாளர் ராமசாமி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக்குமார், மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன், சுயேச்சை வேட்பாளர்களான ஆறுமுகம், சுப்பிரமணி, நாகராஜன், ராஜரத்தினம், ராஜா ஆகிய 10 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்படவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...