கோடை சீசன்: உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் இரு நாள்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
By DIN | Published On : 06th May 2019 03:01 AM | Last Updated : 06th May 2019 03:01 AM | அ+அ அ- |

உதகையில் கோடை சீசனையொட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த இரு நாள்களில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் மே மாதத்தின் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
அதேபோல அரசு ரோஜா பூங்காவுக்கு 2 நாள்களில் சுமார் 30,000 பேரும், படகு இல்லத்துக்கு சுமார் 25,000 பேரும் வந்துள்ளனர்.
இவற்றைத் தவிர அவலாஞ்சி, கோரக்குந்தா, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறும் வனத் துறையினருக்கு சொந்தமான பகுதிகளிலும், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள சூழலில் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்துத் தரப்பினரிடத்திலும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உதகையில் தற்போது மழையில்லாவிட்டாலும் இதமான கால நிலையே நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.