முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையில் வாக்கு எண்ணும் மையத்தில் விதிமீறல் நடப்பதாக சுயேச்சை குற்றச்சாட்டு
By DIN | Published On : 15th May 2019 07:47 AM | Last Updated : 15th May 2019 07:47 AM | அ+அ அ- |

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விதிமீறல் நடப்பதாக சுயேச்சை வேட்பாளரான படகா தேச கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்துக்கு 100 மீட்டர் தொலைவுக்கு வெளியில்தான் மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களின் வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டுமென்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். ஆனால், நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை 10-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் அடிக்கடி வந்து சென்றன.
இதுதொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களுக்கு ஏதும் தெரியாது எனக்கூறி விட்டனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தேர்தல் நெறிமுறைகளை மீறிய செயல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது கட்சியின் நிறுவனத் தலைவர் மஞ்சை மோகன் உடனிருந்தார்.