முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
என்சிசி மாணவிகளின் நடைப்பயண முகாம் நிறைவு
By DIN | Published On : 15th May 2019 07:46 AM | Last Updated : 15th May 2019 07:46 AM | அ+அ அ- |

உதகையில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த அகில இந்திய என்சிசி மாணவிகளின் மலையேற்ற நடைப்பயண முகாம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இந்த மலையேற்ற நடைப்பயணத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், அந்தமான் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 1,000 மாணவிகள் பங்கேற்றனர்.
இம்மாணவிகளுக்காக கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, உதகை அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தாற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இம்மாணவிகள் தேயிலைத் தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், வானியல் ஆராய்ச்சி மையம், அரசினர் தாவரவியல் பூங்கா, வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தங்களது நடைப்பயணத்தின்போது பார்த்து அவை தொடர்பான குறிப்புகளை எடுத்துக் கொண்டனர்.
இந்த நடைப்பயண முகாம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. உதகை அருகே உள்ள முத்தொரையிலுள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில் என்சிசி டைரக்டர் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பங்கேற்று பேசியதாவது:
அடுத்த 20 ஆண்டுகளில் என்சிசி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மத்திய, மாநில அரசுகளின் உதவியால் என்சிசி மாணவிகளுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் அனைத்து வகையானஅறிவுப்பூர்வமான பயிற்சிகளை அளிக்க தயாராக உள்ளோம். என்சிசி மாணவிகள் ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்படுவதோடு, இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலான உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் என்சிசி அமைப்பின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் தேவ், கோவை மண்டல என்சிசி அலுவலர் கர்னல் பீட்டர் செலஸ்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.