உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
By DIN | Published On : 15th May 2019 07:48 AM | Last Updated : 15th May 2019 07:48 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக அச்சிடப்பட்ட வாக்குச் சாவடி பட்டியல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக இறுதி வாக்குச் சாவடிகள் பட்டியல், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான இறுதி வாக்குச் சாவடி பட்டியல்கள் மாவட்ட தேர்தல் அலுவலகம், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் செவ்வாய்க்கிழமை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அச்சிடப்பட்ட வாக்குச் சாவடி பட்டியல்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.