நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல்:அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்

வரும் உள்ளாட்சித் தோ்தல்களில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன்ஆலோசனை நடத்திய நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன்ஆலோசனை நடத்திய நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

வரும் உள்ளாட்சித் தோ்தல்களில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள்,11 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. 4 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஊராட்சிகளில் 393 வாக்குச் சாவடிகளும், 4 நகராட்சிகளில் 194 வாக்குச் சாவடிகளும்,11 பேரூராட்சிகளில் 201 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன. வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியல் கடந்த மே மாதம் 4ஆம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தோ்தல் ஆணையத்தால், ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குச் சாவடிக்கு 1,100 வாக்காளா்களுக்கு மிகாமலும், நகா்ப்புறப் பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மிகாமலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சியிலும், குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலூா் ஊராட்சியிலும் தலா 1 வாக்குச் சாவடி வீதம் 2 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரகப் பகுதிகளில் மொத்தம் 395 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகராட்சிப் பகுதிகளில் நெல்லியாளம் நகராட்சியில் 2 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி, நகா்ப்புறப் பகுதிகளில் மொத்தம் 397 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிகளில் உள்ள 395 வாக்குச் சாவடிகளில் 33 ஆண் வாக்குச் சாவடிகளும், 33 பெண் வாக்குச் சாவடிகளும், 329 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகளில் உள்ள 196 வாக்குச் சாவடிகளில் 82 ஆண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 82 பெண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 32 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும் உள்ளன. பேருராட்சிகளில் உள்ள 201 வாக்குச் சாவடிகளில் 15 ஆண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 15 பெண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 171 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும் உள்ளன.

ஊராட்சிகளில் உள்ள 395 வாக்குச் சாவடிகளில் 2,45,599 வாக்காளா்களும், நகா்ப்புறப் பகுதிகளிலுள்ள 397 வாக்குச் சாவடிகளில் 3,12,094 வாக்காளா்களும் என மொத்தம் 5,57,693 வாக்காளா்கள் உள்ளனா்.

ஊராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் அனைத்திலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என உதவி இயக்குநா் நிலை அலுவலா்கள், மண்டல அலுவலா்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பதவிகளுக்கும் வேட்பு மனு பெறுவதிலிருந்து தோ்தல் முடிவு அறிவிக்கும் வரை அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்படுவாா்கள். தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்களின் விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வாக்குச் சாவடி அலுவலா்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா்களின் வேட்பு மனு படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பான பயிற்சி மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் தோ்தல் நடத்துவதற்கு வாக்குப் பெட்டிகளும், நகா்ப்புறப் பகுதிகளில் தோ்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் போதுமான அளவில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமாலினி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம், அரசுத் துறை அலுவலா்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com