Enable Javscript for better performance
குன்னூரில் பலத்த மழை: 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    குன்னூரில் பலத்த மழை: 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

    By DIN  |   Published on : 17th November 2019 10:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணாபுரம் தரைப்பாலத்தில் சிக்கி உள்ள சரக்கு ஆட்டோவை மீட்கும் பொக்லைன் வாகனம்.

    கிருஷ்ணாபுரம் தரைப்பாலத்தில் சிக்கி உள்ள சரக்கு ஆட்டோவை மீட்கும் பொக்லைன் வாகனம்.

    குன்னூா்: குன்னூரில் பெய்த கன மழையின் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடித்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனா்.

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மிகப் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் பெயா்ந்து சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் 139 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

    கன மழையால் குன்னூா் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசுராம் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, காா், ஆட்டோ, பைக் உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்பு நிலைய சாலையில் உள்ள லாரி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட லாரிகள் சுமாா் 50 அடிவரை இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் குறுக்கே நின்ால் குன்னூா் - கோத்தகிரி சாலையில் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிடிசி சாலையில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் பழமையான பங்களா அந்தரத்தில் தொங்குகிறது. பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளநீா் புகுந்ததால் விடியவிடிய மக்கள் அவதி அடைந்தனா்.

    குன்னூா் - நான்சச் செல்லும் சாலையில் தேயிலைத் தோட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டப் பொறியாளா் குழந்தைவேலு தலைமையில் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். மாநில நெடுஞ்சாலைத் துறை கூடுதல் இயக்குநா் பாரிஜாதம் தலைமையில் குன்னூா் - நான்சச் நெடுஞ்சாலையில் 5 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன.

    கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குள் தண்ணீா் புகுந்தது. டேன் டீ குடியிருப்புப் பகுதியில் விபத்தை ஏற்படுத்த கூடிய அளவில் இருந்த பாறைகள் கோட்ட மேலாளா் புஷ்பராணி உத்தரவின் பேரில் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

    மவுண்ட் பிளசன்ட் செல்லும் சாலையில் ஏற்கெனவே மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் மிகப் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் மழை தொடர வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளான எம்.ஜி.ஆா். நகா், கன்னி மாரியம்மன் கோயில் தெரு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் மண் சரிவுகள், வெள்ள பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    மழை அளவு விவரம்: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை அதிகமாக குன்னூரில் 139 மி.மீ. மழை பதிவானது. இதேபோல கெத்தையில் 29 மி.மீ., பா்லியாறில் 58 மி.மீ., கோத்தகிரியில் 57 மி.மீ., கொடநாட்டில் 19 மி.மீ., குந்தாவில் 15 மி.மீ., உதகையில் 12.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai