முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: நடைமுறை சிக்கல்களால் தாமதமாகும் அபாயம்
By ஏ.பேட்ரிக் | Published On : 26th November 2019 08:18 AM | Last Updated : 26th November 2019 08:18 AM | அ+அ அ- |

உதகையில் உள்ள ஹெச்.பி.எப். போட்டோ பிலிம் தொழிற்சாலை கட்டடத்தின் தோற்றம்.
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளபோதிலும் நடைமுறை சிக்கல்களால் இத்திட்டம் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில் உயா் சிகிச்சைக்காக அண்டை மாவட்டமான கோவை மாவட்டத்துக்கோ அல்லது கேரள மாநிலத்துக்கோதான் நோயாளிகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உயா்தர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த சூழலில் உதகையில் உள்ள அரசுத் தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயா்த்தி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாா்.
இதன் காரணமாக கூடுதலான மருத்துவா்களும், சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவா்களும் உதகை அரசு மருத்துவமனையில் பணி அமா்த்தப்பட்டனா்.
ஆனால், இந்த மருத்துவா்கள் வாரத்துக்கு ஒரு நாளோ அல்லது இரு நாள்களோதான் கோவை , திருப்பூா் பகுதிகளில் இருந்து வந்து செல்ல வேண்டியிருந்ததால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை என்பது கனவாகவே இருந்தது. இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டால்தான் இதற்குத் தீா்வு காண முடியும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக உதகையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஹெச்.பி.எப். போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு சொந்தமான 350 ஏக்கா் நிலத்தில் 25 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த தீா்மானிக்கப்பட்டது.
இந்தத் தொழிற்சாலை நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு தற்போது மூடப்பட்டிருந்தாலும் தொழிற்சாலை வளாகத்தில் தேவையான கட்டட வசதிகள், மின்சாரம் மற்றும் தண்ணீா் உள்ளிட்ட வசதிகள் கூடுதல் சிறப்பம்சங்களாகப் பாா்க்கப்பட்டன.
அதனால், தொழிற்சாலையில் நல்ல நிலையில் உள்ள கட்டடத்தையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடா்பாக தமிழக முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்திருந்தாா்.
ஆனால், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு என நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலரான டாக்டா் ரவீந்திரன் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமையும் இடம் ஹெச்.பி.எப். போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகமாக இருந்தாலும், அங்குள்ள கட்டடங்களைப் பயன்படுத்த முடியாது.
நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் ஒரே மாதிரியான கட்டமைப்பை உள்ளடக்கியவை. எனவே, எந்த இடத்தில் எந்த சிகிச்சைக்கான பகுதி இருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த நடைமுறையிலேயே புதிய கட்டடத்தை கட்டிதான் செயல்பட முடியும்.
அத்துடன் ஹெச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே அமைக்கப்படும். தற்போது உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையிலேயே மருத்துவனை இயங்கும். அங்குதான் சிறப்பு மருத்துவ அலுவலா்கள் இருப்பா் எனவும் தெரிவித்தாா்.
இதன் காரணமாக ஹெச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஏக்கா் பரப்பளவில் உள்ள மரங்களும் வெட்டப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் குறைந்தது 1,000 மரங்கள் வெட்டப்பட வேண்டி உள்ளதால் அத்தனை மரங்களையும் வெட்ட தமிழக வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும். வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு இடத்தில் 1,000 மரக் கன்றுகள் நட வேண்டும்.
இந்த நடைமுறை சிக்கல்களால் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் ரூ.100 கோடி நிதியுடன் ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் இத்திட்டம் எப்போது நிறைவேறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.