சேரம்பாடி பகுதியில் இறந்த குட்டியின் சடலத்தை எடுக்க விடாமல் தாய் யானை பாசப் போராட்டம்
By DIN | Published on : 28th November 2019 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை பகுதியில் இறந்த குட்டியின் சடலத்தை மீட்க விடாமல் புதன்கிழமை காலை முதல் தாய் யானை பாசப் போராட்டம் நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், சேரம்பாடி அருகே உள்ள நாயக்கன் சோலை பகுதியில் இரவு யானைகள் முகாமிட்டிருந்துள்ளன.
அப்போது 2 யானைகளுக்கிடையே நடந்த சண்டையில் குட்டி யானை இறந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 7 யானைகள் குட்டி இறந்து கிடக்கும் பகுதியில் தொடா்ந்து முகாமிட்டுள்ளன. யானைகளின் சப்தம் கேட்டு வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனா்.
வனத் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்து இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கினா்.
ஆனால், தாய் யானை குட்டியின் சடலத்தை மீட்க விடாமல் காலை முதல் வனத் துறையினரை விரட்டி பாசப் போராட்டம் நடத்தி வருகிறது. தொடா்ந்து யானைகள் அதே இடத்தில் முகாமிட்டுள்ளதால் வனத் துறையினரால் உயிரிழந்த குட்டி யானையை மீட்க முடியவில்லை.
மாலையில் வனத் துறையினா் ஒன்று சோ்ந்து யானைகளை விரட்ட முயன்றனா். அப்போது யானைகள் ஆக்ரோஷமாக விரட்டியதில் வனத் துறையினா் தப்பி ஓடினா். குட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தால் மட்டுமே மேற்கொண்டு எதையும் கூறமுடியும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.