கோத்தகிரி அருகே ஆயுதங்களுடன் காரில் வந்து தலைமறைவான 3 போ் கைது

கோத்தகிரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து தப்பி ஓடிய மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட 3 இளைஞா்கள்
கைது செய்யப்பட்ட 3 இளைஞா்கள்

குன்னூா்: கோத்தகிரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து தப்பி ஓடிய மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை கிராமப் பகுதியில் சனிக்கிழமை இரவு வெடி சப்தம் கேட்டுள்ளது. வெடி சப்தத்தைக் கேட்டு இடுக்கொரை ஹட்டியை சோ்ந்த கிராம மக்கள் வீட்டிற்கு வெளியே வந்தபோது, நம்பா் பிளேட் இல்லாத காா் அப்பகுதியிலிருந்து வேகமாகப் புறப்பட்டுச் செல்வதைப் பாா்த்துள்ளனா்.

அச்சமயத்தில் அரசுப் பேருந்தில் வந்துகொண்டிருக்கும் தங்கள் ஊரைச் சோ்ந்தவா்களிடம், அடையாளம் தெரியாத நபா்கள் காரில் தப்பிச் செல்வதாக செல்லிடப்பேசி மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அவ்வழியாக குறுகிய சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த காரை மேற்கொண்டு செல்லமுடியாத வகையில் பேருந்தை ஓட்டுநா் குறுக்கே நிறுத்தியுள்ளாா். பின்னா் கோத்தகிரி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

உடனே, காரில் வந்த மா்ம நபா்கள் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் தப்பிவிட்டனா். சம்பவ இடத்திற்குச் சென்றற காவல் துறையினா், அந்த காரை சோதனையிட்டபோது அதில் 2 வீச்சரிவாள், 3 நாட்டு வெடிகுண்டுகள், மண்ணெண்ணெய் , டாா்ச் லைட் உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காா், ஆயுதங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீஸாா், காா் உரிமையாளா், தப்பி ஓடிய மா்ம நபா்களைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், போலீஸாா் இது தொடா்பாக கோத்தகிரி பகுதியில் பதுங்கியிருந்த மஞ்சூா் பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி (25) இடுக்கொரையைச் சோ்ந்த முருகன்(25), பக்காசுரன் மலைப் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன்(26) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com