உதகை ஏரி ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை: வழக்குரைஞா் யானை ராஜேந்திரன்

உதகையில் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது குறித்து விரைவில் நீதிமன்றம் மூலம்
உதகை ஏரி ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை: வழக்குரைஞா் யானை ராஜேந்திரன்

உதகையில் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது குறித்து விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

நீலகிரியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு, யானைகள் வழித் தடம், அனுமதியில்லாத கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உதகை வந்திருந்த சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், குன்னூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரி குளிா்ச்சியாகவும், பசுமை நிறைந்ததாகவும் காணப்பட்டது. தற்போது நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நீலகிரியின் சீதோஷ்ணநிலை மாறி வருவது வேதனை அளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களாக்கள் கட்டக்கூடாது.

உதகையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்துக் கட்டடப் பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், தண்ணீரை விற்பனை செய்து வரும் தனியாா் நிறுவனத்தின் மீதும் விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் வழித் தடத்தில் உள்ள 821 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பது குறித்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

45 டிகிரியில் உள்ள மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தடையை மீறி பாறைகள் உடைக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் வனப் பகுதியில் விடப்பட்டுள்ள 3 மாத குட்டி யானையின் நிலை குறித்து வன அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com