முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு நள்ளிரவு வரை கொள்முதல் மையங்கள் திறப்பு
By DIN | Published On : 24th October 2019 05:44 AM | Last Updated : 24th October 2019 05:44 AM | அ+அ அ- |

நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை வரத்தை சமாளிக்க கொள்முதலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குன்னூா் ‘இன்கோ சா்வ்’ கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் 15 கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில் 30 ஆயிரம் போ் அங்கத்தினா்களாக உள்ளனா். தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்தப் பகுதியில் உள்ள கொள்முதல் மையங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனா். நடப்பு ஆண்டு துவக்கத்தில் மழை பொழிவு குறைவாக இருந்ததால் பசுந்தேயிலை உற்பத்தியும் குறைவாக குறைந்தது. ஆகஸ்ட் மாதம் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்தது. இதனால் கொள்முதல் மையங்களுக்கும் வரத்து அதிகரித்தது. பெரும்பாலான தொழிற்சாலைகள் தினசரி 40 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளா் பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், கூட்டுறவு தொழிற்சாலைக் கட்டுப்பாட்டில் உள்ள 300 கொள்முதல் மையங்களில் இலை வரத்து அதிகரித்து வருகிறது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், 150 கொள்முதல் மையங்களில் இலை கொள்முதல் செய்யப்பட்டு, தேயிலைத் தூள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கொள்முதல் மையங்களில் மாலை 6 மணிக்கெல்லாம் பணி முடிந்து விடும். கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட இலை கொள்முதல் அதிகரிப்பால் இரவு 12 மணி வரை பணி நீடிப்பதால் இலை மூட்டைகள் கொள்முதல் மையங்களில் நள்ளிரவு நேரம் வரை வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரவுக்கு ஏற்றாா்போல் விலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.