சுடச்சுட

  

  வீடுகள், வணிக நிறுவனங்கள் குப்பையைப் பிரித்து வழங்காவிட்டால் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியர் அறிவிப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 15 ஆம்தேதி முதல்  வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைக் காவலர்களிடம்  வழங்காவிட்டால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு  துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். 
  இதுதொடர்பாக  அவர்  தெரிவித்துள்ளதாவது:
  நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வன விலங்குகளின் உயிரினை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை ஒழிக்கும் பொருட்டும், கிராமப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டும் உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக  நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்ல  தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  எனவே, பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களில் உள்ள குப்பைகளை தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக  பிரித்து வழங்க வேண்டும். 
  இந்த நடைமுறை செப்டம்பர் 15 ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை மாவட்டம் முழுவதும் கட்டாயமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.  
  வணிக நிறுவனங்களில் உள்ள  குப்பைகளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் கட்டாயமாக அவர்களின்  வணிக  நிறுவனங்களின் வெளியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைக்கென தனித்தனியாக  குப்பைத்தொட்டி வைத்து அவற்றில் குப்பைகளைப் பிரித்துக் கொட்டி உள்ளாட்சி  அமைப்புகளின் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை  என  பிரிக்காமல் ஒரே இனமாக  மூன்று  முறைக்கு மேல் உள்ளாட்சிப் பணியாளர்களிடம் வழங்கப்பட்டால் அவர்களது வீடுகள், வணிக நிறுவனங்களின் குடிநீர், மின்சார இணைப்பு ஆகியவை  எவ்வித  முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படும். 
  எனவே, மாவட்ட  நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் , வணிக  நிறுவனங்கள் ஒத்துழைத்து நீலகிரி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai