காந்தல் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி:  அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்

உதகையில் காந்தல் பகுதியில்  சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால்

உதகையில் காந்தல் பகுதியில்  சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதாகவும், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தி அரசுப்  பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
உதகையிலிருந்து காந்தல் பகுதிக்கு தினந்தோறும் 6 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதகை நகரிலிருந்து மத்திய பேருந்து நிலையம்,  படகு இல்லம், மைசூரு சாலை வழியாக இப்பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி  சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் காந்தல் பகுதியில் சாலையோ ரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொள்வதால் ஒரு பேருந்து உள்ளே சென்றால் எதிரில் மற்றொரு பேருந்து வர முடியாத நிலை ஏற்படுகிறது.  இதுதொடர்பாக காவல் துறையினரிடம் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அப்போதெல்லாம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
 ஆனால், அண்மைக்காலமாக இப்பிரச்னையை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் அவ்வளவாக கண்டு கொள்ளாததால் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பல பேருந்துகள் பாதி வழியிலேயே திருப்பப்பட்டு நகரப் பேருந்து நிலையத்துக்கு திரும்பி  வந்து விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும் மிகுந்த 
சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகரப் பேருந்து ஓட்டுநர்கள் வியாழக்கிழமை பகலில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவோர் உடனடியாக அவற்றை அங்கிருந்து எடுத்து மாற்று இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும்,  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து வாகன உரிமையாளர்களும், ஒரிரு நாள்களுக்குள் மாற்று இடங்களைக் கண்டறிந்து  வாகனங்களை நிறுத்திக்  கொள்வதாக தெரிவித்ததையடுத்து அரசுப் பேருந்துகளின் இயக்கம் சீரடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com