Enable Javscript for better performance
தெங்குமரஹாடாவில் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தெங்குமரஹாடாவில் மனுநீதி நாள் முகாம்

    By DIN  |   Published on : 14th September 2019 07:09 AM  |   அ+அ அ-   |    |  

    தெங்குமரஹாடாவில்  நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 355 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம்  மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    ஈரோடு மாவட்ட எல்லையையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்துக்குள்பட்ட  தெங்குமரஹாடா பகுதியில்  மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    முகாமில்  355 பயனாளிகளுக்கு பல்வேறு  நலத்திட்ட  உதவிகளை வழங்கி  மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா  பேசியதாவது-
    தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஆனால் பழங்குடியின மக்கள் குறைந்த அளவிலேயே பயனடைகின்றனர். எனவேதான்  மனுநீதி நாள் முகாம் பழங்குடியின மக்கள் வாழும் இடங்களைத்  தேடி வந்து நடத்தப்படுகிறது. பழங்குடியின மக்கள் அனைத்து திட்டங்களையும் தெரிந்து அதிக அளவில் பயனடைய வேண்டும். பழங்குடியின மக்கள்  தங்களின் அடிப்படை வசதிகளான
    சாலை, குடிநீர், மின்வசதி போன்றவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள்  பாதுகாப்பு திட்டம்,  முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18,000 மாக உயர்த்தி  வழங்கப்படுகிறது என்றார். 
    இந்த முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையாக 11 பயனாளிகளுக்கும்,  விலையில்லா சலவைப்பெட்டி 2 பயனாளிகளுக்கும்,  நீர் தெளிப்பான் கருவி 20 பயனாளிகளுக்கும்,  திசு வளர்ப்பு வாழைக் கன்று 200 பயனாளிகளுக்கும், மான்டரின் ஆரஞ்சு நாற்றுகள் 100 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 2 பயனாளிகளுக்கும், பழங்குடியினர் சாதி சான்று 20 பயனாளிகளுக்கும் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
    இந்நிகழ்ச்சியில், குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சி.கலைச்செல்வன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai