கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: இருவருக்குப் பிடி ஆணை: விசாரணை அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத இருவருக்குப் பிடிஆணை பிறப்பித்தும்,

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத இருவருக்குப் பிடிஆணை பிறப்பித்தும்,  வழக்கின் விசாரணையை அக்டோபர் 4 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தும் மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 
கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 ஆம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன்,  வாளையாறு மனோஜ், ஜிதின் ஜாய்,  ஜம்ஷேர் அலி, சதீஷன், மனோஜ் சாமி,  தீபு,  சந்தோஷ் சாமி,  பிஜின்குட்டி,  உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
இவர்களில் முதல் எதிரியாக  அறிவிக்கப்பட்டுள்ள சயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 30 ஆம்தேதி நடைபெற்றபோது 10 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 பிரிவுகளில்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 13 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை மீண்டும் வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் பிஜின்குட்டி, உதயகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. எஞ்சிய 8 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர்.  அப்போது நீதிபதி வடமலையிடம், அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கின் விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டுமென அரசு வழக்குரைஞர் பால நந்தகுமார் கோரிக்கை விடுத்தார். 
ஆனால்,  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள்  தரப்பு வழக்குரைஞர் ஆனந்தன் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த ஆவணத்தின் நகலே இதுவரை கிடைக்காத சூழலில்  மேல் முறையீடு செய்வதற்கு  அவகாசமளிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மாவட்ட நீதிபதி வடமலை வெளியிட்ட உத்தரவில்,  வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4 ஆம்தேதிக்கு  ஒத்திவைப்பதாகவும்,  வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நேரில் ஆஜராகாத பிஜின்குட்டி,  உதயகுமார் ஆகியோருக்குப் பிடி ஆணை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com