உதகையில் ரூ. 6.16 கோடி மதிப்பிலான கட்டடங்கள், சாலைகள் திறப்பு: உள்ளாட்சித் துறை அமைச்சர் பங்கேற்பு

உதகையில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ. 616.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 17 புதிய கட்டடங்கள், சாலைகள் திறந்துவைக்கப்பட்டன.

உதகையில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ. 616.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 17 புதிய கட்டடங்கள், சாலைகள் திறந்துவைக்கப்பட்டன. இவற்றை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். தவிர,  ரூ. 20 கோடி மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
உதகையில்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா காட்சி முனை வரையில் ரூ. 1.89 கோடியில் அமைக்கப்பட்ட சாலை, பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 89 லட்சத்து 42,000  மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், பல்நோக்க கட்டடம், கோழிப்பண்ணை  கட்டடம், பேரூராட்சி சார்பில் பொக்காபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சேலக்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், கேத்திவேலி வியூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் என மொத்தம் ரூ. 64 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ. 31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட  தும்மனட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலகக் கட்டடம்,  ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவில்  ரூ. 92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், பொதுப்பணித் துறை சார்பில் முதிரக்கொல்லி,  முள்ளன்வயல், எருமாடு, மசினகுடி ஆகிய  பகுதிகளில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சுகாதார நிலையங்கள் ஆகியவையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உதகை நகராட்சியில் கோடப்பமந்து கால்வாயில் ரூ. 5 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணி, பேரூராட்சி சார்பில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கரக்கப்பள்ளி முதல் வாட்சக்கொல்லி வரை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.  
கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட ஸ்பிரிங் காட்டேஜ், ஒரசோலை, டாக்டர் வாட்ஸ்  சாலை வரையில் 
ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள், கோத்தகிரி, ஜெகதளா பேரூராட்சிகளில் மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்,  11 பேரூராட்சிகளில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் 112 குடிநீர் திட்டப் பணிகள்,  ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 35 ஊராட்சிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் 86 குடிநீர்த் திட்டப் பணிகள் செய்யப்பட உள்ளன.
பொதுப்பணித் துறை சார்பில் ரூ. 3.48 கோடி  மதிப்பீட்டில்  உதகை வட்டாட்சியர் அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பீட்டில்  பொது சுகாதாரத் துறைக்கு துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு, சுகாதார மேம்பாட்டு மைய கட்டடங்கள், மருத்துவ அலுவலர் குடியிருப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ. 20 .43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.
மேற்படி திட்டங்களுக்கும், குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மசினகுடி பகுதியில் ரூ. 1.3 கோடி  மதிப்பில் கட்டப்பட உள்ள 144 குடியிருப்புகளுக்கும் அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது என்று  அமைச்சர் வேலுமணி  தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர்  கார்த்திகேயன்,  நீலகிரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராமு, மாநிலங்களவை  முன்னாள் உறுப்பினர் 
கே.ஆர்.அர்ஜுணன், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், அரசுத் துறை  அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com