சீசனுக்கு முன்பாக நீராவி ரயிலை புனரமைக்க வேண்டும்: மலை ரயில் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th September 2019 08:26 AM | Last Updated : 19th September 2019 08:26 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நீராவி ரயில் என்ஜினை புனரமைத்து மே மாதம் வரும் கோடை சீசனுக்கு முன்பாக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை ரயில் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலக்கரி நீராவி என்ஜின் 1914 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது. இந்த என்ஜின் 1918 ஆம் ஆண்டு நீலகிரி மலை ரயில் சேவையில் இணைக்கப்பட்டது.
பழைமையான எக்ஸ் 37384 நிலக்கரி நீராவி என்ஜினை காட்சிப் பொருளாக வைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பழைமையான நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, காட்சிப் பொருளாக வைக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எக்ஸ் 37384 எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், உந்து சக்தி குறைவால் அடிக்கடி பழுதாகி வந்தது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பழைமையான நிலக்கரி நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு செய்தது. இதற்காக திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே என்ஜின் பணிமனைக்கு கடந்த வாரம் கொண்டுச் செல்லப்பட்டது. இந்த நீராவி என்ஜினை புனரமைத்து வரும் மே மாதம் கோடை சீசனில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை ரயில் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.