ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கோத்தகிரியில் செயல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரியில் செயல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியுடன் ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பு ஆகிய உப தொழில்களிலும் விவசாயிகளை ஊக்குவித்து நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் 100 ஹெக்டேர் பரப்பில் கோத்தகிரி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. 
 இதில் பயனடைய 1 ஹெக்டேர் பரப்பில் காய்கறி சாகுபடி நிலம் வைத்திருப்பதோடு ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களாகவும், அதற்கு போதுமான இட வசதி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள 50 சதவீத மானியமாக ரூ.25 ஆயிரம், 2 கறவை மாடுகள் வாங்க ரூ.30 ஆயிரம், 10 ஆடுகள் வளர்க்க ரூ.15 ஆயிரம், 20 நாட்டு கோழிகள் வளர்க்க ரூ.6,000, மண்புழு உரம் தயாரிக்க ரூ.12,500 மானியம் என மொத்தம் ரூ.1 லட்சம் பின்னேற்பு மானியமாக தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
 தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்புக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
 இத்திட்டத்தை செயல்படுத்த தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் கொண்டு குழு மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குநர், கோத்தகிரி அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவல் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com